Saturday, March 16, 2013

மாற்றுத்திறனாளிகள் தேவையை ஏற்பதில் ஏனிந்த வன்மம்?


மாற்றுத்திறனாளிகள் தேவையை ஏற்பதில் ஏனிந்த வன்மம்?

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 9 கோடி என்று கணக்கிடப் பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் இது அதிகமாகும். சில பணக்கார நாடுகளை விட இந்தியாவின் ஒட்டு மொத்த மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாகும். இவர்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் சந்திக்கிற அவமதிப்புகளை விட அரசு அலு வல்பூர்வ நடைமுறைகளால் ஏற்படும் மன உளைச்சல்களே அதிகம்.பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த வர்களே. அவர்கள் கல்வி கற்கவும் வேலை வாய்ப்பு பெறவும் நலத்திட்ட உதவிகள் பெறவும் ஏன் நாள்தோறும் வாழ்க்கையை நகர்த்தவேகூட அரசை சார்ந்திருக்க வேண்டியுள்ளது.


ஆனால் அதற்கான நலத்திட்ட உதவிகளை அவர்கள் பெறவேண்டுமானால் மாற்றுத்திறனாளி என்ற சட்டப்பூர்வ மருத்துவச் சான்றிதழ் தேவைப் படுகிறது. இந்தச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவில் ஒரு மாற்றுத் திறனாளி ரயிலிலும் பேருந்திலும் சலுகைக் கட்டணத்தில் பயணிக்க முடியும்; மத்திய- மாநில அரசுகள்அளிக்கும் சலுகைகளை பெறமுடியும்.ஒவ்வொருவரின் உடல் குறைக்கு ஏற்ப மாறுபட்ட சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. மேலும் அதற்கேற்ற சிறப்பு மருத்துவர்கள் ஆய்வு செய்தே சான்றிதழ்கள் வழங்கவேண்டும்.
ஆனால் நிலைமை என்னவென்றால், இது குறித்து பல அரசாணைகள் வெளியிட்ட பின்ன ரும் அரசு மருத்துவமனைகளில் இவை எளிதில் கிடைப்பதில்லை.உதாரணத்திற்கு ஒன்று, பின்தங்கிய தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ச்செல்வி என்ற மாற்றுத் திறனாளி இந்த சான்றிதழைப் பெற பெரும் போராட்டமே நடத்திவருகிறார். தருமபுரி அரசு மருத்துவமனைக்குச் சென்று, தனக்கு மாற்றுத் திறனாளி சான்றிதழை வழங்குமாறு அதற்கான சிறப்பு மருத்துவரிடம் கேட்டபோது, அவர் ஒரு நபரைக் கை காட்டியுள்ளார். அவரிடம் சென்றால் பணம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். நான் ஏன் பணம் தர வேண்டும்? அரசாணைப்படி தானே சான்றி தழை கேட்கிறேன்’’ என்று அந்த பெண் கேட்ட தற்கு, அசிங்கமான சொற்கள்தான் பதிலாக வந்துள்ளன. கை கால்களை முற்றிலும் இழந்தவர்கள் மற்றும் கை கால்களை நீட்டமுடியாமல் நிரந்தர மாக முடங்கியிருத்தல் போன்ற குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு மருத்துவரும் சான்றிதழ் வழங் கலாம் என்று அரசாணையில் தெளிவாக குறிப் பிடப்பட்டுள்ளது. இத்தகைய சான்றிதழை தர மறுக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாணையில் எச்சரிக் கப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தால், அவர்கள் பதிவு எண், மருத்துவ மனையின் பெயர் அடங்கிய சீல் இருப்பதில்லை. இவை இரண்டும் இல்லையென்றால் சான்றிதழ் செல்லாது. தொடர்ந்து இதுபோன்ற புகார்கள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எதிரொலிப்பதால் தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் சான்றிதழைப்பெற ஏற்பாடு களை செய்ய வேண்டும். தரமறுக்கும் மருத்து வர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.