Wednesday, February 20, 2013

இரு கைகளின்றி கால்களில் விமானம் ஓட்டி பெண் கின்னஸ் சாதனை!

இரு கைகளின்றி கால்களில் விமானம் ஓட்டி பெண் கின்னஸ் சாதனை!


அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா என்ற பெண் இரண்டு கைகளுமின்றி கால்களை மட்டுமே பயன்படுத்தி எடை குறைவான விமானத்தை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவின் அரிசோனா மாவட்டத்தில் 1983ம் ஆண்டு பிறந்தவர் ஜெசிகா காக்ஸ். பிறக்கும்போதே இவரது இரண்டு தோள்களும் கைகளின்றி இருந்தது.
எனினும் மனம் தளராத இவர் வளரும் போது மற்றவர்கள் செய்வதுபோல் பல் துலக்குவது, தலை சீவுவது மற்றும் அத்தியாவசியத் தேவைகள் என அனைத்து செயல்களையும் கால்களைக் கொண்டே செய்து பழகி வந்துள்ளார். இதனிடையே ஒரு கட்டத்தில் சாதனை செய்ய வேண்டும் என்று விரும்பிய அவர், டேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையில் சேர்த்து கறுப்பு பெல்ட்டை பெற்றுள்ளார். மேலும், நீர் சறுக்கு விளையாட்டு, சுவர் ஏறுதல், வாகனம் ஓட்டுதல் போன்ற விளையாட்டுக்களை கால்களாலே விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதனையடுத்து தனது 14 வது வயதில் கால்களைக் கொண்டு கார் ஓட்டி சாதனை படைத்தார். கணினியில் கைகளைக் கொண்டு வார்த்தைகளை டைப் செய்ய சிரமம் ஏற்படும் போது, கால்களில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளை டைப் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைகளையெல்லாம் மிஞ்சும் வகையில் 30 வயதாகும் ஜெசிகா, தற்போது குறைந்த எடை கொண்ட விமானத்தை சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் வெறும் கால்களில் ஓட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.அதுமட்டுமன்றி, தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், மாற்றுத்திறனாகளின் திறமையை வெளிக்கொணரும் வகையிலும் உலகெங்கிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்து தன்னம்பிக்கை உரையாற்றியும் வருகிறார். இதுவரை 17 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார் ஜெசிகா. மேலும், தனது பணியை தொடர்ந்து செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.